Monday 19 December 2011

காதல் ♥♥♥


எனக்கு கிடைத்த வரம் 
நீ...
உனக்கு கிடைத்த வரம்
நான்...
நமக்காய் கிடைத்த வரம்
காதல் ....
 

என்னுள் 
மோதித்தெறிக்கின்ற
உன் பார்வையில் எல்லாம்
அணு அணுவாய்
காதல்....
 

தேங்கிய நீரிலும்,
தெரிகின்ற நிலவதினில்
உன் முகம் காணும்
என் கண்களுக்குள் 
காதல்....
 

உன் விழி ஈர்ப்பில்
விதைக்கப்பட்டு,
எனக்குள் கருத்தரிக்கும்
என் கவிதைக்குள்ளும்
காதல்....
 

இருண்டு கிடக்கும்
இளமையதில்,
ஒளிந்து கிடக்கும் 
ஆசைகளை 
வெளிச்சமிட்ட உன் 
வெட்கப் புன்னகையில்
காதல்....
 

பேசி பேசி 
விடிந்த பின்னும்
தீராத வார்த்தைகளில்
இன்னும் இன்னும் தீராத
காதல்....
 

உன் மௌன கவியை
மொழிபெயர்க்கும்
என் செல்லக் கம்பனாய்
காதல்....
 

உன்னோடு பேசுவதாய்
எண்ணி, எனக்குள்ளே
பேசிக்கொள்ளும்
நேரத்தில் வந்துவிழும்
கவிதைகள்
காதல்....
 

கருமேகம் சூழ
தோகை விரித்தாட
காத்திருக்கும்,
வண்ணமயில் போல,
உனக்கான காத்திருப்புகள்
அத்தனையும் 
காதல்...
 

நீண்ட பயணம் அதில்
வழித்துணையாய்
வந்திட்ட 
உன்  நினைவுகளில் எல்லாம் 
காதல்....
 

ஏதோ ஒரு தருணத்தில்,
என்னைக் கடக்கும் 
எல்லாரும் நீயாய் 
தெரிகின்ற விந்தை
காதல்...
 

வேண்டாம் என்று 
நினைத்த வேளையிலும்,
முடியாது என்று,
தவித்த வேளையிலும்,
நீயே வேண்டும்
என்ற தவிப்பு
காதல்.....
 
 தேவதை 
உன்னை ஊரே
காதல் செய்ய,
நான் மட்டுமே 
உன் நேசிப்பை பெற வேண்டும்
என்ற தவம்
காதல்...
 

உன் புன்னைகைக்கும்,
நீ சூடும் பூவிற்கும்,
உடுத்துகின்ற உடுப்புக்கும்,
உதட்டுச் சுளிப்பிருக்கும்
வைக்கும் பொட்டுக்கும்,
விரல் இடுக்கில் விழுகின்ற
உன் கூந்தல் கற்றைக்கும்,
தவற விட்ட பேருந்திற்குமாய்
கவிதை சொல்லும்
என் கவிதை
அத்தனையிலும்
மொத்தமாய் காதல்....
♥♥♥♥

Monday 5 December 2011

எது காதல், எது காமம்...எங்கே நமது தேடல்?...



வணக்கம் என் நண்பர்களே.....நம்ம வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு விசயமும், நமக்கு ஏதாவது ஒரு விதத்துல, அனுபவத்தையும், தைரியத்தையும் தருகிறது....எத்தனையோ பேரை நம்ம கடந்துபோக சிலர் மட்டும் தான் நம்மை நட்பாகவும், காதலாகவும், அன்பால கடத்திச் செல்கிறார்கள்....இதுல நல்லது மட்டுமே கொடுக்கிற நட்பு ஒரு ரகம்....தன் சுயநலத்துக்காக, காதல்கிற பேருல, நம்ம சுத்தியிருக்கிற, நண்பர்கள் உலகத்த சுருக்கிக்கிற காதலர்கள் ஒரு புறம் (வெகு சிலர் )....(வழக்கம் போல காதல் பதிவான்னு நினைக்க வேணாம்.....)...காதலால நட்ப புறம் தள்ளி வைத்த என் தோழியின் தோழி கதையை அவங்கள் வேண்டுதல் பேருல, கொஞ்சம் நிதர்சன உண்மைகளை மறைத்து, நாகரீக முறையில் பதிவிடுகிறேன்...

அவர்கள் தன் காதலை பதிவிட சொன்னதன் நோக்கம் : காதல் பித்து பிடித்து அலையும் பலருக்கு வெறுப்பாக இருக்கலாம் இந்த பதிவு, ஆனாலும் எங்கயோ தன் சுயம் தொலைத்து கொண்டு இருக்கும் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ என் வாழ்க்கை ஒரு படமாக இருக்கும்....அதற்காக வேண்டும் என் காதலை கதையாகவோ...இல்லை கவிதையாகவோ சொல்லிவிடுங்கள் என்று சொன்னார்....

அதோடு, அந்த தோழியின் சுய அறிவில்லா முன்னால் காதலன், என் வலைத்தளம் வருவானாம் ...உங்கள் நண்பர்கள் இதற்கு இடும் கருத்து அவன் மனதிற்கு எட்டவேண்டும்,  என்று என்னிடம் கூறினார்......

அதோடு என் மனதில் நல் மாற்றம் வேண்டி உங்களிடம் என் கதையை பகிர்கிறேன்னு அவங்க கதைய சொல்லிடாங்க...இதோ உங்களுக்காய்

இளமையின் முதல் சந்தோஷ காலம் எதுன்னு கேட்டா எல்லோரும் கண்ண மூடிடு நம்ம கல்லூரி காலத்தை தான் பதிலாய் சொல்வோம்...அப்படிப்பட்ட கல்லூரி காலம் முடிவடைந்தவுடன் அவரவர் வேலை தேடி பயணப்படுவர்...அனிதா பிறப்பில் வசதியாய் பிறந்து, காலமாற்றத்தால் கடன் பட்ட குடும்பத்தின் சுமையைக் குறைக்க சென்னை  நோக்கிப் பயணப்பட்டவள்....இதுவரை கட்டுக் கோப்பாய் வளர்ந்த சூழலில், சென்னை சுதந்திரம் அவளுக்கு புது வித பயத்தை தந்து...இருப்பினும் ஒரு நல்ல அலுவலகத்தில் பணியில் சேர்ந்தாள்..அவள் பெற்றவர்களை விட அதிகம் பாதுக்காப்பை அவள் நட்பு அவளுக்கு தர, அழகான அவள் அலுவலக காலம் நயமாய்ச் செல்ல,  தன் தோழியின் நண்பனாய் அறிமுகமானான் அரவிந்த்...

அரவிந்த் பார்த்ததும் பற்றிக்கொள்ளும் காந்தக் கண்களுக்குச் சொந்தக்காரன்....அரவிந்தனின் முதல் பார்வையே, அனிதாவின் மீதான காதல் படையெடுப்பாய் மாறியது..அதை பார்வையில் உணர்ந்த அனிதா, சற்றும் பொருட்படுத்தாமல் நட்பு ரீதியில் நாட்களைக் கடத்தினாள்..நாட்கள் நட்பின் போர்வையில் நகல, அனிதா மீதான் தன் காதலை அரவிந்தன் அவளிடம் சொன்னான்...

இது அவள் எதிர்பார்த்த ஒன்று தான், இருந்தாலும் அவன் காதலை ஏற்காத அனிதா அவன் நட்பை விட்டு விலக நினைத்த நேரம், சிறு சிறு பிரச்சனைகள் மற்றவர்களால் இவளுக்கு முளைக்க, இவள் தான் நண்பர்களிடம் பகிர்வதை குறைத்து, அரவிந்தனிடம் அந்த பிரச்னைக்கு தீர்வு நாடி சென்றாள். அரவிந்தனும் அவளின் பிரச்சனைகளுக்கு முடிவு காண, நாட்கள் இவன் என் நண்பன் என்ற ரீதியில் நகல, அரவிந்தனின் அன்பும், அரவணைப்பும், காதலும் இவளுக்குள் புதுவித கற்பனை உலகத்தை வளர்க்க, இதுவரை தன்னை சுற்றயுள்ள தன் சுற்றத்தை கொஞ்சம் மறந்தே போனாள்...

அனிதா தன் காதலை மறைக்க முடியாமல், அரவிந்தனிடம் காதலை சொல்ல, இனிய பரபரப்புடன் சந்தோஷ வானில், அழகாய் பறந்தனர் இந்த காதலர்கள். ஏக்கங்களும், தவிப்புகளும்,கனவுகளும், காதலும், கற்பனையும் அவர்கள் வாழ்வை காதலால்  நிரப்ப, அன்பு காதலர்களாய், அழகோடு பவனி வந்தனர்....

பிறிதொரு நாட்களில் அரவிந்தன் அனிதாவிற்க்காய், அனுப்பிய
சின்ன சின்ன பரிசுகளும், நலம் விசாரிக்கும் குறும்செய்திகளும், அக்கறை அழைப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய, அனிதா கொஞ்சம் தடுமாறியே போனாள்...அனிதா வர தாமதம் ஆனாலும் தவியாய் தவித்து அவள் அலுவலகத்தை படையெடுத்த அரவிந்தன், அவள் விரும்பி அழைத்தும், அவளை சந்திப்பதை தவர்க்கத் தொடங்கினான்...தவறான ஒருவனை காதலித்து விடமோ என்று மனக்கிடங்கில், பயத்தின் தீயைப் பற்ற வைத்தாள் அனிதா..

பிறகு அரவிந்தனின் செயலும், பார்வையும் இவள் பயத்தை உறுதி படுத்த, நிலைகுலைந்து போனாள் அனிதா..அவன் நிராகரிப்பின் காரணம் அறிய, அவனை அலைபேசியில் தொடர்புகொண்டாள்...அதுவரை அனிதா, அரவிந்தனை தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்தாலே, தொலைபேசியில் அழைக்கும் அரவிந்தன், இன்று அவள் பலமுறை அழைத்தும், தொடர்பை ஏற்க்க வில்லை...

அனிதா இதுவரை அனுபவிக்கத வலியை உணர, சுற்றி உள்ள அனைத்தும், இவளுக்கு சூனியமாய் தெரிய,எதிலும் இவள் கவனம் செல்லாமல், தன் காதலே கெதி என்று, அவன் பெயரையும், அவனோடு களித்த அந்த இடங்களுக்கும், சென்று தன்னோடு அவன் என்றும் இருக்கிறான் என்ற எண்ணத்தில், பொழுதை கழித்தாள் அனிதா...வேலையிலும் கவனமின்றி, நட்பின் பார்வையில் , தன் விசயங்களை பகிர்தலின்றி தனக்கென்ற ஒரு உலகத்தை கற்பனையிலே உருவாக்கி, அவனோடு உறவாடி வந்தாள்...

பின் ஒரு நாளில் அரவிந்தனிடம் இருந்து அழைப்பு வர, பறந்து சென்றாள் அனிதா அவனை சந்திக்க, அரவிந்தன் இந்த ஊடலுக்கு ஏதேதோ, காரணம் சொல்லி அவளை சமாதானப் படுத்த, அனிதாவின் உண்மையன்பை உணர்ந்த அரவிந்தன், பின் அவளை விட பன்மடங்கு அனிதாவை நேசித்தான்...வருடங்கள் ஐந்து காதலோடு கழிய, அனிதாவின் குடும்பம் அவளை திருமணத்திற்கு நிர்பந்திக்க, அரவிந்தனிடம் இதை பற்றி பேச முடிவு செய்தாள் அனிதா....

அரவிந்தனும் இதற்க்கு ஒப்புதல் அளிக்க, திருமணம் பற்றி பெற்றோர்களிடம் பேசும் முன்பே,  கனவுகளோடு காலம் களித்தனர் காதலர்கள்..இந்த நேரத்தில் அரவிந்தனின் அலுவலகத்தில், புதிய பணியில் வந்து சேர்ந்தாள் ராகினி...ராகினி அல்ட்ரா மார்டன் அழகி...வசதி படைத்தவள்...ஆரம்பத்தில் அரவிந்தனிடம் நட்போடு பழக ஆரம்பித்தவள், நாளைடவில் அரவிந்தனின் துடுக்குப் பேச்சும், அவன் குணமும் இவளை ஈர்க்க, காதல் வலையில் அவன் அனுமதி இன்றி விழுந்தாள் ராகினி...

ஒரு மாலையில் வழக்கம் போல் அனிதாவும், அரவிந்தனும்  சந்தித்துக் கொண்ட அந்த அந்தி நேரம் ராகினியைப் பற்றியும், அவள் பணபலத்தைப் பற்றியும் பேசி முடித்தான் அரவிந்தன்,,,அனிதாவிற்கு அவன் பேச்சு சந்தோஷத்தையும், கொஞ்சம் மிரட்சியையும் தந்தது...தன் காதலன் தன் மீது உள்ள நம்பிக்கையால் ஒரு பெண் பற்றி தன்னிடம், பேசுவது அவளுக்கு சந்தோஷம் தந்தாலும், அதற்காய் அவன் பிரயோகப் படுத்திய வார்த்தைகள் அவளுக்கு மிரட்ச்சியை தந்தது...எதற்கும் ராகினியிடம் தள்ளியே இருங்கள் என்று அன்பு கட்டளை இட்டுவிட்டு, அன்றைய சந்திப்பை காதலோடு முடித்தனர்.

ராகினி கொஞ்சம் கொஞ்சமாய் அரவிந்தனை, ஆளநினைத்தாள்...
அரவிந்தனும், ஒரு கட்டத்தில் வளைந்து கொடுத்தான்...இருவரும், நட்பின் வாசலில் நுழையும்போதே, அரவிந்தன் இதுவரை எந்த பெண்ணையும் நேசிக்கவில்லை என்ற, காதல் அனுமதி சான்றிதழுக்கு கையொப்பம் இட்டுச் செல்ல, ராகினியும்  இவன் தனக்கானவன் என்றே தன் மனதில் எண்ணிக்கொள்ள, ராகினி தன் காதலை அரவிந்தனிடம் சொல்ல, தன் குடும்ப சூழல் காரணமாய், பணக்கார பெண்ணை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அரவிந்தனுக்கு, ராகினியின் காதல் வரமாய் வந்தது என்று நினைத்து தன் வாழ்வை, பணம் கொண்டு வளப்படுத்தினான்..

.அனிதாவை சந்திக்கும் ஒரு வாரத்திற்குள், இவன் வாழ்வில் வந்திட்ட இந்த மாற்றத்தை உணராத அனிதா, வழக்கம் போல் காதலோடு அவனுக்காய் காத்திருந்தாள்..அரவிந்தனும், அன்றைய சந்திப்பில் நடந்தவைகளை, மறைத்து ராகினி அவனை விரும்புவதாகவும், தான் அதற்க்கு சம்மதிக்க வில்லை என்றும் சொல்லி விட்டு சென்றான்... ஆனாலும் இவன் கண்கள் பேசும் வாதையில்ர்த்தைக்கு பொருள் அறிந்த அனிதா, கண்ணீர் கொண்டு தன் காதலை மீண்டும் அவனிடம் சொல்ல, இதுவரை பணபோ இருந்த அரவிந்தன், ராகினியிடம் தான் ஆறு வருடம் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், இன்று நாங்கள் நண்பர்கள் என்றும் சொல்ல, ராகினி அனிதாவை சந்திக்க வேண்டும் என்று அரவிந்தனிடம் கட்டளை விதிக்க, அனிதா அறியாமல், அவர்கள் சந்திக்கும் அந்த மாலையில் ராகினி அரவிந்தனோடு வந்தாள்..

இதை சற்றும் எதிர்பார்க்காத அனிதா , ராகினி வருகையின் காரணம் அறிந்து செய்வதறியாமல், திணற, இறுதியில் ராகினியே தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், உங்கள் பழைய காதல் தனக்கு தெரியும், உங்களின் நெருக்கமும் தெரியும் அதைப் பற்றி தான் கவலை கொள்ளவதாக இல்லை என்று சொல்லிவிட்டு, அவ் விடத்தை விட்டு நீங்கிச் சென்றாள்.... இது கனவாய்  இருக்குமோ என்று தன்னை தேற்ற நினைத்து கொண்டு இருக்கையில், அரவிந்தன் ராகினி வசம் சென்றதை அவன் வார்த்தைகள் அவளுக்கு காட்டியது...

தனக்கான உலகம் சூனியமாய்ப் போனதை உணர்ந்த அனிதா, செய்வதறியாமல் விழிநீர் வழிய, தான் ஒருவனால் ஏமாற்றப் பட்டோம் என்பதை உணர்ந்து, தற்கொலைக்கு முயல, உணர்வுகள் இணைத்த அவள் நட்பு, என்றும் இல்லாமல் அவளை தொடர்பு கொள்ள
தன் நிலையைச் சொல்லி அழுத அனிதாவை, ஆறுதல் சொல்லி, அவள் உண்ட விஷத்தை மருத்துவர் துணையுடன் வெளியேற்றினர்....

இவள் விஷம் அறிந்திய காரணம் அறிந்த நண்பர்கள், அரவிந்தன் அலுவலகத்தில் படையெடுக்க, அவனை தாக்கினர்...ராகினி நிலைமை உணர்ந்து அவர்களை விலக்கி விட, அரவிந்தன் பாதுகாக்கப்பட்டான்... தான் ராகினி  முன் தண்டிக்க பட காரணமாய் இருந்த அனிதாவை  எப்படியும் கொன்று விட வேண்டும் என்ற உறுதியோடு இருந்த அவனை, அந்த மருத்துவமனைக் காட்சி கொஞ்சம் மாற்றிப் போட்டது....

இருப்பினும் கொச்சை வர்த்தைகாளால் வசைபாடி விட்டு, தனக்கும், ராகினிக்கும் இன்னும் இரண்டு மாதங்களில் பெற்றோர்களால் நிச்சயிக்க பட்ட அந்த திருமண அழைப்பிதழை அனிதாவிற்கு தந்து விட்டு சென்றான்,

தோழி அனிதா இன்று நட்பின் துணையோடு நலமாக சென்னையில், தன் பணிகளோடும், அவன் நினைவு தந்த வலிகளோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்...அரவிந்தன் தன் புது காதல் மனைவியோடு, உறுத்தாமல் உலா வருக்கிறார்....

நண்பர்களே...இது என் தோழியின் தோழிக்கு நடந்த கதை....எது காதல், எது காமம்...எங்கே நமது தேடல்?....என் தோழியின் காதலன் போல் தெளிவான அறிவில்லாமல், சஞ்சலப் படும் மனதிற்கு, இன்னொருவர் பலியாகலாமா?.....நமக்கு தெரிந்ததெல்லாம், காதலை பெண்கள் புறம் தள்ளுவார்கள் என்று, இங்கு என் தோழியின் சுயநல காதலன்.அந்த தோழியின் உண்மைக் காதலை புறம் தள்ளினார்...

இது ரொம்ப தேவையான பதிவான்னு நீங்க கேக்கலாம்...ஆனா இன்னைக்கு தற்கொலைகள் அதிகமா இருக்க இரண்டு காரணம் ஒன்னு:கடன்
இன்னொன்னு : காதல்....
கடன் தன் சுற்றியுள்ள சுழலின் நிலைமையை பெருக்க இல்ல சமாளிக்க வாங்குற விஷயம்....
ஆனால் காதல்....இலகுவாய் ஒருவர் உள்ளம் நுழைத்து, உயிரை இழக்கும் அளவிற்கு துணிய  வைக்கும் மாய கொள்ளைக்காரன் அல்லவா இந்த காதல்....

இப்போ என் தோழியின் வீட்டில் திருமண பேச்சுக்கள் நடக்க, தோழி அவற்றை புறம் தள்ளி, சுயமாய் வாழ விரும்புவதாய், அவர் பெற்றோரிடம் சொல்லி வருகிறார்...என் இனிய நண்பர்களே... என் தோழிக்கு நல்ல நடப்பாய் தாங்கள் தரும் பதில் என்ன என்று அவர் அறிய ஆவலாய்  உள்ளார்.நீங்கள் இந்த பதிவுக்கு தரும் வரவேற்ப்பை பொறுத்தே இதை போன்ற உண்மை சம்பவங்களை பகிர இருக்கிறேன்..

வழக்கம் போல் இந்த பதிவை உங்கள் பார்வை பயணத்தில் பயணப் படவைக்கிறேன்....(இப் பதிவை நகைச்சுவையாய் எடுக்காமல் ஒரு பெண்ணின் வாழ்க்கை இப் பதிவில் உள்ளதென்ற எண்ணத்தில் உங்கள் கருத்துக்களை இடவும்...அதோடு நாகரீக மான பின்னூட்டங்கள் மட்டுமே இங்கே வெளியிடப்படும், நகைச்சுவையாய் அல்லது வேறுவிதமாய் நீங்கள் அளிக்கும் பின்னூட்டம் புறம் தள்ளப்படும் என்பதையும் தெரிவிக்கிறேன்.புரியுறவங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.... )